‘மகிழ் முற்றம்’ மாணவர் குழு ஜூலை 10ல் பதவியேற்பு!

 

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களிடையே தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன் மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 'மகிழ் முற்றம்' என்ற புதிய திட்டத்தின் கீழ் 5 மாணவர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் குழுவினரின் பதவியேற்பு விழா வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமைத் திறனை அடிமட்ட நிலையிலிருந்தே மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பள்ளி அளவிலான இந்த அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு நாட்டின் ஜனநாயகம், தேர்தல் முறை மற்றும் அரசியல் கட்டமைப்பு குறித்த நேரடி அறிவு புகட்டப்படும்.

மேலும், தேர்வு செய்யப்படும் மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களிலேயே மாதிரி சட்டப்பேரவை மற்றும் மாதிரி நாடாளுமன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அவைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்திற்கான தலைவர் மற்றும் அமைச்சர்களைத் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதற்கான விரிவான கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஜூன் 30-க்குள் மாணவர்களுக்கான குழுக்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முழுமையாக நிறைவடையும். ஜூலை 1-க்குள் அந்தந்தக் குழுக்களுக்கான தலைவர்கள் முறைப்படி தேர்வு செய்யப்படுவர். ஜூலை 6ம் தேதி அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். ஜூலை 7 பள்ளி அளவிலான ஜனநாயக முறைப்படியான தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூலை 10 தேர்தலில் வென்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பதவியேற்பு விழா விமரிசையாக நடைபெறும்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப்படும் இந்த 'மகிழ் முற்றம்' அமைப்பில், ஒரு மாணவர் ஒட்டுமொத்தத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரைத் தொடர்ந்து பள்ளியின் உள்கட்டமைப்பு, கல்வி, விளையாட்டு மற்றும் ஒழுக்கம் சார்ந்த முக்கியத் துறைகளைக் கவனிப்பதற்காக மாணவர்களிலிருந்தே தனித்தனி அமைச்சர்களும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.