ஏன் படிக்கல... ஆசிரியை கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! 

 

 

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்திஸ்வரன் என்பவருடைய மனைவி ஆனந்த லட்சுமி ஆவர். இவர்களின் 16 வயது மகள் ஜீவிதா அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். சரியாகப் படிக்கவில்லை என ஒரு ஆசிரியை இவரைக் கண்டித்ததாகக் கூறப்படும் நிலையில் மனவருத்தம் அடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த சமயநல்லூர் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாகப் போலீசார் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் சட்டப்பூர்வமான விசாரணையை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே மாணவி படித்த அரசுப் பள்ளி முன்பாக அவரது உறவினர்கள் அனைவரும் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மாணவியின் சாவுக்குக் காரணமான ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது