காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் முட்புதரில் சடலமாக மீட்பு!
மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் நேற்று செப்டம்பர் 7 அன்று விடுமுறை நாளில் விளையாடச் சென்று வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இந்நிலையில் ஆனையூர் கண்மாய் முட்புதாரில் அந்த மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன தனது மகனை யாரோ திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டதாக அவனது தாய் கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து இது கொலையா என்ற கோணத்தில் தீவிரமான விசாரணையை நடத்தி வருகின்றனர். முதற்கட்டத் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.