போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க தடை ... சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!
அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உயர்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்பு காரணமாகத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
டெல்லி மற்றும் தமிழகத்தில் நடந்த சில போராட்டங்களில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் மற்றும் சமூக விரோதிகள் பங்கேற்று, மாணவர்களைத் தவறான வழியில் தூண்டுவதாகக் கூறி உயர்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சுற்றறிக்கை குறித்த செய்தி வெளியானதும், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் எனக் கூறி கடும் எதிர்ப்பைப் பதிவிட்டன.
நேற்று முன் தினம் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கைக்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 19-ஆம் தேதி தமிழக அரசு அதை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.