"நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கைது".. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்ததற்கும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய நீட் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளனர். மேலும், போராட்டக் களத்தில் மாணவர்களைக் காவல் துறையினர் அத்துமீறித் தாக்கியும், தரதரவென இழுத்துச் சென்றும் வன்முறையைக் கையாண்டுள்ளனர்.
மாணவர்களின் நியாயமான போராட்டத்தைக் காவல் துறை அராஜகப் போக்கோடு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது எனப் பெ.சண்முகம் சாடியுள்ளார்.