குஷியில் மாணவர்கள்... முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் சிபிஎஸ்இ... கடைசி தேதியும் நீட்டிப்பு!

 

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. இந்த வருடம் முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' எனப்படும் கணினித் திரை மதிப்பீட்டு முறையின் கீழ், தாங்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்கள் கிடைத்திருப்பதாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விடைத்தாள்களின் நகல்களைப் பெற ரூ.700 விதிக்கப்பட்டிருந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கெனவே விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ரூ.700 அதிகம் என பெற்றோர்களும் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விடைத்தாள்கள் நகலுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதே போன்று மறுமதிப்பீட்டிற்குப் (Re-evaluation) பிறகு மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரித்தால், அவர்கள் செலுத்திய முழுக் கட்டணத்தையும் வங்கி கணக்கில் திருப்பி வழங்க சிபிஎஸ்இ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கு முன்பாக, மாணவர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல்களை ஆன்லைனில் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு மே 19, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

 இது குறித்து இந்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், தங்களது விடைத்தாள்களைப் பார்க்க விரும்பும் மாணவர்களிடம் ரூ.100-ம், மறுகூட்டல் செய்யத் தனியாக ரூ.100-ம், குறிப்பிட்ட கேள்விக்கான விடையை மீண்டும் சரிபார்க்க ரூ.25-ம் மட்டுமே நியாயமான கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விடைத்தாள்களின் ஸ்கேன் நகலைப் பெற விரும்பும் தகுதியான மாணவர்கள் வரும் மே 23ம் தேதி வரை இணையதளம் மூலம் தங்குதடையின்றி விண்ணப்பிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து, விடைத்தாள்களின் இறுதிச் சரிபார்ப்பு மற்றும் முறையான மறுமதிப்பீட்டிற்கான பிரதான விண்ணப்பப் பதிவு வரும் மே 26-ஆம் தேதி தொடங்கி மே 29, 2026 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் யாவும் பாட நிபுணர் குழுவால் துல்லியமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்படும்.

கல்வி வாரியத்தின் இந்தத் திடீர் கட்டணத் திருப்புதல் சலுகையானது, தேர்வுத் தாள் மதிப்பீட்டுச் செயல்பாட்டில் மாபெரும் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதி செய்யும் என்பதால் ஒட்டுமொத்தப் பெற்றோர்கள் மற்றும் சாமானிய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.