undefined

குஷியில் மாணவர்கள்... புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - 3 நாட்கள் தொடர் விடுமுறை!

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 9ம் தேதி திங்கட்கிழமை, திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையின் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி மாத தேர்த்திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது: மார்ச் 7ம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறை/பள்ளி விடுமுறை. அதற்கு அடுத்த நாளான மார்ச் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. அதன் பின்னர்  மார்ச் 9ம் தேதி திங்கட்கிழமை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும்.

இந்த விடுமுறை 'செலவாணி முறிச்சட்டம் 1881'-ன் கீழ் அறிவிக்கப்படாததால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. வங்கிகள் வழக்கம்போலச் செயல்படும். மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அவசரப் பணிகளுக்காகக் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும்.

புதுக்கோட்டை நகரின் காவல் தெய்வமாகக் கருதப்படும் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். மார்ச் 9ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.