மாணவர்கள் பேரணியில் தடியடி... உயர்நீதிமன்றம் நாளை அவசர விசாரணை!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் மற்றும் மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துணை ராணுவப்படை மற்றும் காவலையினர் நடத்திய பலப்பிரயோகத்திற்கு எதிராகவும், கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்கை நாளை அவசர விசாரணையாக எடுத்துக்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இதற்கு ஆதரவளித்து உண்ணாவிரதம் இருந்தார். பேரணியைத் தடுக்கும் பொருட்டு மத்திய செயலகம், சேவா தீர்த்தம், பட்டேல் சவுக், ராஜீவ் சவுக் மற்றும் ஜன்பத் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தடைகளை மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மழைக்கு மத்தியிலும் ஜந்தர் மந்தரில் கூடி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்றபோது, காவல்துறை தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைச் சிதறடித்தது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ரெயில் பவன் சந்திப்பு வரை மாணவர்கள் திரண்டதால், நாடாளுமன்றத்தின் வெளிப்புற நுழைவு வாயில்கள் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. இந்த மோதலில் 50 காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஸ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசின் உயர்மட்ட அளவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார்.
ஜனநாயக வழியில் போராடிய இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டதை ஏற்று, டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (ஜூலை 22) இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.