தனியார் கல்லூரி விடுதி உணவில் புழு - மாணவர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம்!

 

கோவை – பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் மிதந்த சம்பவத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், விடுதி காப்பாளர் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் அளித்தனர்.

நிர்வாகத் தரப்பில் உரியப் பதிலளித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், விடுதி வளாகத்திற்குள் திரண்டு நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உணவின் தரத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இருப்பினும், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விடுதி உணவகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.