ஒரே பைக்கில் சென்ற 5 பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி... கதறித் துடிக்கும் பெற்றோர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் ஒரு பெரும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள், இன்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் தங்களது வீடுகளுக்குத் திரும்புவதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் (பைக்) ஏறிச் சென்றுள்ளனர்.
ஒரே பைக்கில் 5 மாணவர்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மிகக் கொடூரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால் பைக்கில் இருந்த 5 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.இந்தக் கோர விபத்தில் ஜஸ்டின் மற்றும் புருனோ ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பைக்கில் பயணித்த ஆலன், சுஜித் மற்றும் அஜய் ஆகிய மற்ற 3 மாணவர்கள் மிகக் கடுமையான படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினர்.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.