பிரபல ரவுடி ஆக்னலை சுட்டு பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு... தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய ஆக்னல் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர், திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசாரைக் கண்டதும் ரவுடி ஆக்னல் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை நோக்கித் திடீரெனச் சுட்டார். இதில் ராஜபிரபு காயமடைந்த போதிலும், சுதாரித்துக் கொண்டு தற்காப்புக்காகவும் குற்றவாளியைப் பிடிக்கவும் தனது துப்பாக்கியால் ரவுடியைத் திருப்பிச் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்து நிலைகுலைந்து கீழே விழுந்த ரவுடி ஆக்னலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த மோதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய 2 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.