சிலிண்டருக்கு ரூ.2,700 வரை மானியம்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் எல்.பி.ஜி சிலிண்டருக்கான மானியம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
14.2 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர் வாங்கும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்குச் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 வீதம் மானியம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 2025-26 நிதியாண்டில், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 9 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பயனாளி ஆண்டுக்கு ரூ.2,700 வரை சேமிக்க முடியும்.
5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு விகிதாசார அடிப்படையில் மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்தச் சிறப்பு மானியச் சலுகையானது பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், பட்டியலின/பழங்குடியினப் பிரிவினர் மற்றும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டப் பயனாளிகள் இதில் அடங்குவர். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து e-KYC நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்த பயனாளிகளின் கணக்கிற்கு மட்டுமே இந்த மானியத் தொகை நேரடியாக வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.