சென்னையில் அடுத்தடுத்து படுகொலைகள்... ஒரே இரவில் 185 ரவுடிகளை கைது செய்த போலீசார்!
சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற படுகொலைச் சம்பவங்களை அடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள சோதனையின் அடிப்படையில் ஒரே இரவில் 185 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பெசன்ட் நகர் பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் என்பவரும், செப்டம்பர் 9-ஆம் தேதி திருவொற்றியூரில் துணை நடிகர் பிரதீப் ராஜ் என்பவரும் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து, மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து காவல் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், செப்டம்பர் 10-ம் தேதி இரவில் ரவுடிகளின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சரித்திரப் பதிவேட்டில் இடம்பிடித்துள்ள 185 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள பிடியாணை குற்றவாளிகளைக் கைது செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார்.