அடுத்தடுத்து பரபரப்பு.. முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசிய ஆர்.பி.உதயகுமார்!

 

மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அவர்களைப் பகிரங்கமாக ஒருமையில் விமரிசித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

மதுரை கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய ஆர்.பி.உதயகுமார், தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முந்தைய நிலைப்பாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்:

தமிழக வரலாற்றில் எப்பேற்பட்ட மாபெரும் தலைவர்கள் அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியில், தறுதலை அமர்ந்து கொண்டு 'கொத்து பரோட்டா' என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் என ஒருமையில் சாடினார். கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி  நினைத்திருந்தால் அன்றைக்கே அந்தப் பயலை முடித்திருக்கலாம். ஆனால், அன்று அந்தப் பயலுக்குப் போய் இபிஎஸ் வக்காலத்து வாங்கிப் பேசினார் என்று குறிப்பிட்டார்.

தவெக தலைவர் விஜய்க்கு உண்மையிலேயே தில் இருந்தால், அதிமுகவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு 'தீர்ந்துபோன சக்தி' என்று அவனால் சொல்ல முடியுமா? என ஆக்ரோஷமாகச் சவால் விடுத்தார். சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவெக முயன்று வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக வரும் ஜூலை 18 அன்று தவெக அரசைக் கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜயை அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் "பயல்", "தறுதலை" எனப் பொதுவெளியில் ஒருமையில் விமரிசித்துப் பேசியுள்ளது இரு கட்சித் தொண்டர்களிடையேயும் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆர்.பி.உதயகுமாரின் இந்த அநாகரிகப் பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.