தொடர்ச்சியாக வெற்றி... ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ரோஷிபினா தேவி சாதனை!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான வுஷூ சாண்டா பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு வுஷூ சாண்டா இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி, சீனாவின் ஜாங் சியாவோயுவை எதிர்த்துப் போட்டியிட்டார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 0-2 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்த ரோஷிபினா தேவி, தங்கப்பதக்கத்தை நழுவவிட்டாலும் நாட்டுக்கான வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டிவரை முன்னேறும் வழியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வங்காளதேசத்தின் ஷிகா காதுனை வீழ்த்திய அவர், காலிறுதியில் மக்காவோவின் சூ மான் சினை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் தனியா குசுமன்தியாஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரோஷிபினா தேவி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவர் பங்கேற்ற முந்தைய தொடர்களில் 2018 ஜகார்த்தா: வெண்கலப் பதக்கம், 2023 ஹாங்சோ: வெள்ளிப் பதக்கம், 2026 அய்ச்சி-நகோயா: வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.  வுஷூ விளையாட்டு வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ரோஷிபினா தேவி பெற்றுள்ளார்.