சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து பயங்கர விபத்து! 11 பேர் பலி ,30 பேர் படுகாயம்!

 

 

சூடானின் வடகிழக்கு பகுதியில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சூடானின் செங்கடல் மாகாணத்தில் உள்ள ஒனி என்ற தொலைதூரப் பகுதியில் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சுரங்கத்திற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சூடானில் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மற்றும் முறைப்படுத்தப்படாத தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத இத்தகைய சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்குள் சூடானில் நடந்துள்ள இரண்டாவது தங்கச்சுரங்க விபத்து இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு சூடானில் உள்ள வெஸ்ட் கோர்டோஃபான் பகுதியில் மற்றொரு தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 82 பேர் உயிரிழந்தனர்.தற்போதைய விபத்து நடந்த பகுதியிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்பது பின்னர் தெரியவரும். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.