மக்கள் தொகை கணக்கெடுப்பு தூதராக சுதர்ஷன் பட்நாயக் நியமனம்!

 

இந்தியாவின் மிக முக்கியமான ஜனநாயகக் கடமைகளில் ஒன்றான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில், ஒடிசாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்கை பிராண்ட் அம்பாசிடராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுதர்ஷன் பட்நாயக் தனது அற்புதமான மணல் சிற்பங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு செய்திகளை உலகளவில் கொண்டு செல்வதில் வல்லவர். கணக்கெடுப்புத் தரவுகளின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதன் பங்களிப்பு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் தனது கலைத்திறனைப் பயன்படுத்த உள்ளார்.

இவரது படைப்புகள் பாமர மக்களையும் எளிதில் சென்றடையும் என்பதால், கணக்கெடுப்புப் பணிகளில் 100% பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்ய இவரைத் தூதராக உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பு பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாகத் தாள்களுக்குப் பதிலாக, கணக்கெடுப்புப் பணியாளர்கள் மொபைல் செயலிகள் மூலம் தரவுகளைச் சேகரிக்க உள்ளனர். பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் அல்லது செயலி மூலம் தங்களின் விபரங்களைப் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையினால் தரவுகள் சேகரிக்கப்பட்ட உடனேயே அவை ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் விரைவாக வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2021-ல் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இது 2027-ஆம் ஆண்டில் முழு வீச்சில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. 'பிரகதி' (பெண்) மற்றும் 'விகாஸ்' (ஆண்) ஆகிய இருவர் இந்தக் கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.