'ஜனநாயகன்' வெளியீட்டு தேதியில் திடீர் மாற்றம்!
தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒரு நாள் முன்கூட்டியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு வட்டாரங்களிலிருந்து புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், அண்மையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட இத்திரைப்படம், உலகம் முழுவதும் வரும் ஜூலை 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தற்பொழுது இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திரைப்படத்திற்கான பிரம்மாண்ட எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும், ரசிகர்களுக்கு வார இறுதி நாட்களைத் தாண்டி கூடுதல் வசதியைத் தரும் பொருட்டும், படத்தை ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஜூலை 23-ஆம் தேதியே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் மற்றும் உலகளவில் வியாழக்கிழமை முதலே சிறப்புச் காட்சிகள் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களத்திற்குள் முழுமையாக நுழைந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் இது என்பதால், அவரது திரைப்பயணத்தின் இறுதி விடைபெறுதலாக இப்படம் பார்க்கப்படுகிறது. இதனால், படக்குழுவிடமிருந்து புதிய ட்ரெய்லர் மற்றும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.