திடீர் மாற்றம்... திட்டமிட்டப்படி நாளை விஜய் குமரியில் பிரச்சாரம்... 6 மணி நேரம் அனுமதி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நாளை (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை குமரியில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விஜய் பிரசாரம் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதன்படி, நாளை மதியம் முதல் மாலை வரை சுமார் 6 மணி நேரம் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொள்ள கெடுபிடிகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குமரி மாவட்டப் பயணமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேரக் கட்டுப்பாடு: தேர்தல் அதிகாரிகள் வழங்கிய 6 மணி நேர அவகாசம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்திக்கப் போதுமானதாக இருக்காது எனத் தவெக தலைமை கருதுகிறது.
பிரசார வழித்தடங்களில் காவல்துறை விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களினால், திட்டமிட்டபடி பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தென்கோடி முனையில் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதற்காகப் பிரம்மாண்ட மேடைகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டப்படி நாளை குமரியில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.