தக்காளி விலை திடீர் வீழ்ச்சி - சாகுபடி செலவைக் கூட ஈட்ட முடியாமல் விவசாயிகள் கவலை!

 

தென்காசி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக, அதன் விலை வரலாறு காணாத அளவிற்குச் சரிந்துள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை, ஆய்க்குடி, கம்பளி மற்றும் அனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அதன் விலை கிடுகிடுவெனச் சரிந்து வெறும் ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனையாகிறது.

விதை, உரம், பூச்சிமருந்து மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட இடுபொருள் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் சாகுபடிச் செலவைக் கூட ஈட்ட முடியவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விலை வீழ்ச்சி காரணமாகப் பல விவசாயிகள் தங்கள் பயிர்களைத் தொடர்ந்து பராமரிக்காமலேயே விட்டுள்ளனர்.