சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு... 4 மாதங்களில் 2வது முறை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

சென்னையில் அமைந்துள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களுக்குள் 2-வது முறையாக இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடையே பெரும் கலக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விகிதங்களின்படி, வானகரம் சுங்கச்சாவடியில் கார் மற்றும் ஜீப் போன்ற இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ. 5 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 55 ஆகப் பதிவாகியுள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார் மற்றும் ஜீப் வாகனங்கள் ஒருமுறை கடப்பதற்கான கட்டணம் ரூ. 75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே சுங்கக் கட்டணங்களை முறைப்படி உயர்த்துவது வழக்கம். ஆனால், தற்போதைய நிலையில் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி திடீரெனக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வானகரம் மற்றும் சூரப்பட்டு மட்டுமின்றி, தமிழகத்தின் பல முக்கிய சுங்கச்சாவடிகளிலும் மீண்டும் இத்தகைய கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.