இந்திய அணிக்கு திடீர் பின்னடைவு... உலகைக் கோப்பைத் தொடரின் பாதியில் விலகிய ரிங்கு சிங்!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரிங்கு சிங் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிங்கு சிங்கின் தந்தை ஸ்டேஜ்-4 (நான்காவது நிலை) கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தினால், தனது தந்தையின் அருகில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் ரிங்கு சிங் உலகக் கோப்பைத் தொடரின் பாதியிலேயே இந்தியாவிற்குப் புறப்பட்டுள்ளார்.
சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது வாழ்வா-சாவா நிலையில் உள்ளது. சென்னையில் இன்று பிப். 26ம் தேதி நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. ரிங்கு சிங் இல்லாத நிலையில், அவரது இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் ஆகியோரில் ஒருவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிங்கு சிங் இந்தத் தொடரில் விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்மில் சற்றுத் தடுமாறி வந்தாலும், ஒரு 'பினிஷராக' அவரது பங்களிப்பு அணிக்குத் தேவையாக இருந்தது. தற்போது நிலவும் இக்கட்டான குடும்பச் சூழலை முன்னிட்டு பி.சி.சி.ஐ அவருக்கு நாடு திரும்ப அனுமதி வழங்கியுள்ளது. ரிங்கு சிங்கின் தந்தை விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.