திடீர் திருப்பம்... சிறையில் கை, கால்கள் கட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டது அம்பலம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35) உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில், அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன், தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 13 அன்று அவர் சிறையிலேயே சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இச்சம்பவம் தொடர்பாகச் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறைக் காவலர் சிவக்குமார் ஆகிய 3 சிறை ஊழியர்கள் மற்றும் விஷ்ணு, சாரதி உள்ளிட்ட 8 விசாரணை கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த முக்கிய விவரங்கள்: சம்பவத்தன்று இரவு, சபரி வர்மன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் எனச் சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
சபரி வர்மனின் சத்தம் நிற்காததால் ஆத்திரமடைந்த சிறை வார்டன்கள், சமையல் வேலை முடித்து வந்த கைதிகளைத் தூண்டிவிட்டு அவரைத் தாக்குமாறு கூறியுள்ளனர். வார்டன்களின் தூண்டுதலால் ஆத்திரமடைந்த கைதிகள், சபரி வர்மனின் லுங்கியைக் கொண்டு அவரது கை மற்றும் கால்களைக் கட்டியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்றதால் லுங்கியைக் கிழித்து இறுகக் கட்டி, கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடுமையான தாக்குதலில் நிலைதடுமாறிய மாற்றுத்திறனாளி சபரி வர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூரக் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகள் ஆகிய 11 பேரையும் காவல் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.