திடீர் திருப்பம்... விஜய்யின் 'மெகா பிளான்' மாறுகிறதா? - கூட்டணி குறித்து தவெக திடீர் ஆலோசனை - 2026-ல் 'மாஸ்' கூட்டணி அமையுமா?
தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், "யாரோடும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி" என்று ஆரம்பத்தில் முழங்கிய அக்கட்சியின் தலைமை, தற்போது தனது வியூகத்தை மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை "தனித்தே போட்டி, 234 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள்" எனத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்து வந்த விஜய், தற்போது சில முக்கிய அரசியல் காரணங்களுக்காகக் கூட்டணி குறித்து ஆலோசிக்கத் தொடங்கியிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற மகளிர் தினக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுக கூட்டணிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதே சமயம், கள நிலவரத்தைத் துல்லியமாகக் கணிக்க விஜய் ஒரு ரகசிய சர்வே நடத்தியுள்ளார். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் வலுவான கூட்டணிகளுடன் களம் இறங்கும் நிலையில், தனித்துப் போட்டியிடுவது வாக்கு பிரிப்பிற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும், வெற்றி வாய்ப்பைத் தள்ளிப்போடும் என்றும் அரசியல் ஆலோசகர்கள் விஜய்க்குப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில சிறிய கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் விஜய்யுடன் களம் காண விருப்பம் தெரிவித்துள்ளன. இவர்களை இணைத்துக்கொண்டு ஒரு 'மூன்றாவது அணி'யை உருவாக்கலாமா அல்லது ஒரு பலமான கூட்டணியில் அங்கம் வகிக்கலாமா என்பது குறித்து விஜய் தனது நெருங்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
யாரோடு கூட்டணி? - அரசியல் கணிப்புகள்
பாஜக தரப்பிலிருந்து விஜய்க்குச் சில சிக்னல்கள் கொடுக்கப்பட்டதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதால், விஜய் இதில் நிதானமாக இருக்கிறார்.
அதிமுக - தவெக கைகோர்க்குமா?:
திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்பதால், அதிமுகவுடன் ஒரு புரிதலுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற விவாதமும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆனால், இரண்டுமே பெரிய கட்சிகள் என்பதால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழும்.
மதிமுக மற்றும் இதர கட்சிகள்:
மதிமுக-வுக்குத் திமுகவில் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பதால் வைகோ தரப்பு அதிருப்தியில் உள்ளது. இத்தகைய அதிருப்தி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதே விஜய்யின் இப்போதைய திட்டமாக இருக்கக்கூடும். சசிகலா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில், ராமதாஸும், அன்புமணியுடனான பிரச்சனையால் தனித்து விடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அணி உருவாக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.
நிர்வாகிகள் கூட்டம்:
பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், "தனித்துப் போட்டியிட்டால் விஜய்யின் பிம்பம் உயரும், ஆனால் ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி பலம் அவசியம்" என இரண்டு விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அதாவது மார்ச் 15-க்குப் பிறகு தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.