திடீர் ட்விட்ஸ்ட்... திமுக, அதிமுக அதிருப்தியாளர்களுக்கு வாய்ப்பு... 234 வேட்பாளர்களையும் இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!  

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் இன்று (மார்ச் 29) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்கிறது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள் தவெகவில் வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று காலை 11:00 மணி. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்,  விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 

"புதிதாக முளைத்துள்ள ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுகிறது" என விமர்சித்த விஜய், தேர்தல் ஆணையத்திடம் இது குறித்துத் தனது வழக்கறிஞர் குழு மூலம் முறையீடு செய்துள்ள விஜய், சில அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டணி குறித்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுவதை இந்த வேட்பாளர் அறிமுகம் உறுதி செய்கிறது. இன்று அறிமுகம் செய்யப்படும் வேட்பாளர்களில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தொகுதிக்குள் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சித் தலைமைக்கு தங்களது பலத்தைக் காட்ட, தலைமை அறிவித்திருக்கும் வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது என்றும், தாங்கள் தவெக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்றும், தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் திமுக, அதிமுக அதிருப்தியாளர்களிடையே பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.