கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்... தவெக எம்எல்ஏ மீது புகாரளித்தார் ஆட்சியர்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியர் பத்மஜாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த சர்ச்சையில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியரே நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகத் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தற்போது ஆட்சியரே புகார் அளித்துள்ள தகவல் வெளியாகித் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று (நவம்பர் 23) விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், “மாவட்ட ஆட்சியருக்குச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

நேற்றைய விசாரணையின்போது, ஆட்சியரிடமிருந்து தலைமைச் செயலாளருக்கோ காவல்துறைக்கோ எந்த புகாரும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் பெற்று இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜா, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) புகார் அளித்துள்ளதாகத் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தச் சர்ச்சையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம், 7 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டைத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆரம்பத்தில் மறுத்திருந்தார். இதற்கிடையே, ஆட்சியரே போலீசில் புகார் அளித்துள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தாக்கல் செய்யவுள்ள விளக்கத்தின் மூலம் இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.