திடீர் ட்விஸ்ட்... விஜய்க்கு ஆதிமுக ஆதரவா? புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, புதுச்சேரி ரிசார்ட்டுகளில் தங்கியிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதில் இழுபறி நீடித்து வருவதால், குதிரைப் பேரத்தைத் தவிர்க்க அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டுகளில் தங்கியிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது அறைகளைக் காலி செய்துவிட்டு சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி.சண்முகம், தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவு அளிப்பதன் மூலம் திமுகவை அதிகாரத்திலிருந்து தள்ளி வைக்க முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, தவெக தரப்பில் இருந்து பதில் வராததால் ஆதரவு அளிக்கும் முடிவை அதிமுக கைவிட்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனால், இப்போது எம்.எல்.ஏ-க்கள் சென்னை திரும்புவது, தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிமுக தலைமை ஏதேனும் இறுதி முடிவை எடுக்க வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை விஜய்க்கு உறுதி செய்துள்ளது. அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், விஜய் மிக எளிதாகப் பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராகப் பதவியேற்க முடியும்.

ஒருபுறம் இடதுசாரிகள் மற்றும் விசிகவின் முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், அதிமுகவின் இந்தத் திடீர் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.