தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு - ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனை!

 

வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பதுக்கல் காரணமாகத் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் வரை சில்லறைச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, கடந்த வாரங்களில் ரூ.60 முதல் ரூ.67 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் சர்க்கரை விலை கிலோவுக்குச் சுமார் ரூ.27 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களையும் உணவக உரிமையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி எனத் தொடர் பண்டிகைகள் வருவதால் சர்க்கரைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் வணிகர்கள் சர்க்கரையைப் பதுக்குவதே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. பெட்ரோல் தயாரிப்பிற்காகக் கரும்புச் சாறு பெருமளவில் பயன்படுத்தப்படுவதாலேயே இந்தத் தட்டுப்பாடு எனப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இருப்பினும், எத்தனால் தயாரிப்பிற்குச் சர்க்கரை பயன்பாடு 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், காலநிலை மாற்றம், நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்தது மற்றும் உலகளாவிய சந்தை நெருக்கடிகளுமே இதற்குக் காரணம் என்றும், எத்தனால் காரணம் அல்ல என்றும் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சர்க்கரை விலை உயர்வால் தேநீர் கடைகளில் டீ, காபி மற்றும் பண்டிகைக்காலச் இனிப்புகளின் விலையும் உயரக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. எனவே, சர்க்கரை பதுக்கலைத் தடுத்து விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.