சர்க்கரை விலை உயர்வு எதிரொலி... ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனையில் கொள்முதல் வரம்பு நிர்ணயம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதியில் இருந்து நவராத்திரி பண்டிகை ஆரம்பமாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், சர்க்கரை விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் 'ஆன்லைன்' செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக இரண்டு கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க முடியும்.
ஆன்லைன் விற்பனைக்கு மட்டுமின்றி, நேரடி சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டி மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்களில், ஒரு வாடிக்கையாளர் 2 முதல் 3 கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வினியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை இறக்குமதி செய்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் நடவடிக்கைகள் சந்தையில் சர்க்கரையின் விலையைக் கட்டுக்குள் வைக்க உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.