குழந்தையில்ல... மனமுடைந்த இளம் பெண் தற்கொலை!

 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்த 25 வயதான காவியா என்பவருக்கும், பெங்களூர் நெலமங்களா பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு காவியா தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் குழந்தை பிறக்காத காரணத்தால் காவியா தொடர்ந்து கடுமையான மனவேதனையிலும் கவலையிலும் இருந்து வந்துள்ளார். குடும்பத்தில் குழந்தை இல்லாத விவகாரம் நாளடைவில் பெரிய தகராறாக மாறிப் பின்னர் வரதட்சணைக் கொடுமையாகவும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே கணவர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவியாவைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளனர். நாள்தோறும் வீட்டில் ஏற்பட்ட இந்தத் தொடர் மனக்கசப்புகளாலும் குடும்ப உறுப்பினர்களின் கொடூர நடத்தையினாலும் அவர் பெரும் விரக்திக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுப் பேச்ச வார்த்தை முற்றியுள்ளது. கணவர் குடும்பத்தாரின் இந்தத் தொடர் சித்ரவதையைத் தாங்க முடியாமல் மனமுடைந்த காவியா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவியாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளிலேயே இளம் பெண் வரதட்சணை மற்றும் குடும்பத் தகராறால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்ப பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.