வாட்ஸ் அப் மிரட்டல்... நகைக்கடை பெண் ஊழியர் ஏரியில் குதித்து தற்கொலை!
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில், முன்னாள் கல்லூரி நண்பரின் வாட்ஸ்-அப் மிரட்டலுக்குப் பயந்து 22 வயது இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவைச் சேர்ந்த வாணிஸ்ரீ (22), பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் விற்பனைப் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். வாணிஸ்ரீ சிவமோகாவில் கல்லூரியில் படித்தபோது, அவருடன் அபிஷேக் என்பவரும் ஒன்றாகப் படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
படிப்பை முடித்த பின்னர் வாணிஸ்ரீ வேலைக்காக பெங்களூரு வந்த நிலையில், அவரது முன்னாள் கல்லூரி நண்பரான அபிஷேக், வாணிஸ்ரீயின் சில தனிப்பட்ட புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று வாட்ஸ்-அப் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தத் தொடர் மிரட்டல் மற்றும் மன உளைச்சலால் அதீத விரக்தியடைந்த வாணிஸ்ரீ, அப்பகுதியில் உள்ள ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.