சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு... கைதான 2 பேரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!
கோவை சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு குற்றவாளிகளையும் வரும் ஜூன் 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கக் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடமும், கடந்த மூன்று நாட்களாகக் காவல் துறையினர் தங்களது காவலில் எடுத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த 3 நாள் விசாரணையின் போது, குற்றச் சம்பவம் எப்படி அரங்கேறியது, இதற்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும், முக்கியத் தடயங்களைச் சேகரிக்கும் நோக்கிலும் போலீசார் விசாரணையை நடத்தினர்.
இன்றுடன் மூன்று நாள் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் இருவரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் ஜூன் 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான கார்த்தி அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அங்குள்ள சக கைதிகள் அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த கார்த்தி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் இருவரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.