விசித்திர திருவிழா... பக்தர்கள் தலையில் கோயில் பூசாரி  தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!  

 

வடமதுரை அருகே கே.குரும்பபட்டியில் உள்ள அகோர வீரபத்திரர், ராவணேஸ்வரர், கருக்காளியம்மன் மற்றும் கெப்பாயியம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடி திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாகத் தொடங்கியது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து புனித ஆற்றுக்குச் சென்று கரகம் எடுத்து, பாரம்பரிய சேர்வை ஆட்டத்துடன் கிராம மக்கள் சுவாமிகளை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமிகளுக்குப் பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக விரதம் இருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தின் முன்பு நீண்ட வரிசையில் பக்தி பரவசத்துடன் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோவில் பூசாரி, வரிசையில் அமர்ந்திருந்த ஒவ்வொரு பக்தரின் தலையிலும் தேங்காய்களை உடைத்து விசித்திரமான முறையில் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மேலும், பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து பூசாரி ஆசி வழங்கிய நிலையில், அதனைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த விசித்திர வழிபாட்டைக் காண சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.