தமிழக பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை... ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

 

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16, 2026 அன்று நிறைவடைகின்றன. தேர்வுகள் முடிந்த மறுநாளான ஏப்ரல் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை விடப்படுகிறது.

மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் ஏப்ரல் 25-ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீடு செய்தல், அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகை பள்ளிகளும் 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி திறக்கப்படும். 1 - 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால், இம்மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். தேர்தல் பணிகள் மற்றும் கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.