உலக அதிக வெப்ப பட்டியலில் சென்னை, மதுரை உட்பட 14 நகரங்கள்!
உலக அளவில் மிகக் கடுமையான வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் 50 நகரங்களின் புதிய பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலகெங்கிலும் உள்ள 205 நகரங்களை ஆய்வு செய்து இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 14 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை மற்றும் மதுரை ஆகிய 2 முக்கிய நகரங்கள் இடம்பெற்றிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகளாவிய இந்த பட்டியலில் மதுரை 7-வது இடத்தைப் பிடித்து டாப் 10 வரிசையில் வந்துள்ளது. சென்னையும் இந்த வெப்ப அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டு வரும் காலங்களில் மிகக் கடுமையான சூழலைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் இருந்து ஐந்து நகரங்களும், பாகிஸ்தானில் இருந்து நான்கு நகரங்களும் இந்த பட்டியலில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் அகமதாபாத் உலக அளவில் 2-வது இடத்தையும், மகாராஷ்டிராவின் நாக்பூர் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக இந்திய நகரங்கள் மிக வேகமாக வெப்பமண்டலமாக மாறி வருவதை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.