கொளுத்தும் கோடை ...  11 இடங்களில் சதம் அடித்த வெயில்!  

 

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும், பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாகப் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்குப் பலத்த அனல் காற்று வீசி மக்களை வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 11 முக்கிய நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106.52 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கடலூரில் 104 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 103.28 டிகிரியும், வேலூரில் 103.10 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, மதுரை விமான நிலையம், திருத்தணி மற்றும் அதிராமபட்டினம் ஆகிய இடங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.

தமிழகப் பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலப் பகுதிகளான புதுச்சேரியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், காரைக்காலில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகி அந்தந்தப் பகுதி மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதால் மதிய நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.