அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் முத்தமிடும் சூரியன்... ராம நவமி சிறப்பம்சங்கள்!

 

அயோத்தி ராமர் கோயிலில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆண்டு ராம நவமி விழா, அறிவியலும் ஆன்மீகமும் இணைந்த ஒரு அற்புத நிகழ்வாக அமைகிறது. குறிப்பாக, 'சூர்ய திலக்' எனப்படும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் விழும் அந்தத் தருணம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பிலும், பக்தி பரவசத்திலும் ஆழ்த்தும். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி கோயிலில், இன்று மதியம் சரியாக 12:16 மணிக்கு வரலாற்று நிகழ்வு அரங்கேறுகிறது. பால ராமரின் நெற்றியில் சூரியக் கதிர்கள் திலகமாக விழுந்து, சுமார் 3 நிமிடங்கள் நீடிக்கும் இந்த தெய்வீகக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ காலையில் இருந்தே அயோத்தியில் திரள்கின்றனர். 

இந்த சூர்ய திலகம் நிகழ்வு, லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிகளின் உதவியுடன் கூடிய உயர்தரப் பொறியியல் தொழில்நுட்பத்தால் சாத்தியமானது. கோபுரத்தின் மேலிருந்து வரும் சூரிய ஒளி, நான்கு கண்ணாடிகள் மற்றும் நான்கு லென்ஸ்கள் வழியாகப் பயணித்து, கருவறையில் உள்ள சிலையின் நெற்றியில் 58 மில்லிமீட்டர் அளவில் வட்ட வடிவ திலகமாக விழுந்தது. CSIR-CBRI ரூர்க்கி விஞ்ஞானிகள் மற்றும் பெங்களூரு இந்திய வானியற்பியல் ஆய்வு மையத்தின் (IIA) நிபுணர்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய வழிபாட்டுச் சடங்குகள்:

இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3:30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ராம் லல்லாவுக்குப் புனித நீர் மற்றும் பால் கொண்டு சிறப்புத் திவ்ய அபிஷேகம் மற்றும் சிருங்கார் ஆரத்தி நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு பால ராமருக்கு இன்று 56 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. இன்று இரவு 11:30 மணி வரை இடைவிடாது தரிசனம் வழங்கப்பட உள்ளது.

அயோத்தி நகரம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கருவறையில் நடைபெற்ற சூர்ய திலகம் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பாதுகாப்புப் பணிகளுக்காக 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.