சூப்பர் அறிவிப்பு..  5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பி.எஸ்.என்.எல்..!! 

 
அடுத்தாண்டு ஜூனில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக BSNL அறிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 'முதலில் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும்' என்று பிஎஸ்என்எல் தலைவர் பி.கே.புர்வார் சனிக்கிழமை தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், 'பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, பஞ்சாபில் வரும் டிசம்பரில் இச் சேவை அறிமுகப்படுதத்தப்படும். இதற்கென 200 பகுதிகளில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மாநிலத்தில் மேலும் 3,000 பகுதிகளில் தொழில்நுட்ப வசதிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 4ஜி சேவை கட்டமைப்பு படிப்படியாக ஒவ்வொரு மாதமும் 6,000, 9,000, 12,000 பகுதிகளாக அதிகரிக்கப்படும். வரும் 2024- ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4ஜி சேவை அமலாக்கம் நிறைவுபெற்றதும், 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான போதுமான அலைக்கற்றையை பிஎஸ்என்எல் பெற்றிருக்கிறது. அதன்படி, 2024 ஜூன் மாதத்துக்குப் பிறகு 4ஜி சேவையை 5ஜி சேவையாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அதிவேக 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.