இடதுசாரிகளின் ஆதரவால் தொண்டர்கள் உற்சாகம்... பனையூரில் பட்டாசு.. இனிப்பு மழை!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய இரு கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக ஆதரவு கடிதம் வழங்கிய செய்தி வெளியான உடனே, பனையூர் அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "வெற்றி வேந்தன் விஜய்" மற்றும் "மக்களின் முதல்வர் விஜய்" எனத் தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் அந்தப் பகுதியையே அதிர வைத்தன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவால் தவெக-வின் பலம் 116-ஆக உயர்ந்தது, இந்த உற்சாகத்திற்குக் காரணமாக அமைந்தது.
தனது அரசியல் பயணத்தின் மிக முக்கியமான இந்தத் தருணத்தில் ஆதரவு அளித்த தலைவர்களைக் கௌரவிக்கத் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார்: வெறும் தொலைபேசி அழைப்புடன் நின்றுவிடாமல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்.
மற்ற கட்சித் தலைவர்களை அவர்களின் அலுவலகத்திற்கே சென்று சந்திப்பதன் மூலம், விஜய் தனது அரசியல் முதிர்ச்சியையும், தோழமைக் கட்சிகள் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தொண்டர்களின் இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையே, தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரைச் சந்திக்க உள்ளதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஆளுநர் மாளிகை நோக்கித் திரும்பியுள்ளது.