டெல்லியில் நிபந்தனைகளுடன் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி... கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் தேசியத் தலைநகர் டெல்லியில் வளிமண்டலக் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காற்றுத் தூய்மையைக் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் என இரு குறிப்பிட்ட நேர இடைவெளிகளை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருட்கள் கொண்ட வழக்கமான பட்டாசுகளுக்குத் தடை தொடரும். குறைந்த அளவு புகையை வெளிப்படுத்தும் 'பசுமைப் பட்டாசுகளை' மட்டுமே விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் டெல்லியில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் காவல் துறையும் இணைந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.