"இரவு 10 மணிக்குக் கூட பெண்கள் பாதுகாப்பை உணர வேண்டும்" - காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

 

டெல்லியில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இரவு நேரங்களிலும் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றி நடமாடும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

டெல்லியில் உள்ள பூங்காக்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகளைக் கண்டறிந்து உரிய பாதுகாப்புப் போட வேண்டும். பெண்கள் இரவில் இரவு 10 மணிக்குக் கூட வாகனங்களிலோ அல்லது தனியாக நடந்து சென்றாலும் முழுமையான பாதுகாப்பை உணர வேண்டும்.

வெறும் வழிகாட்டு நெறிமுறைகளும் உத்தரவுகளும் ஏட்டளவில் மட்டுமே இருப்பது உதவாது; காவல்துறையினர் உடனடியாகத் தீவிரச் செயலில் இறங்க வேண்டியது அவசியம் என நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதில் பலன் இல்லை என்பதால், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை எடுக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகள் மனதில் காவல்துறையைக் கண்டால் பயம் ஏற்படும் வகையில் ரோந்துப் பணிகளை இரவு பகலாக அதிகரிக்க வேண்டும். பண்டிகை காலம் வரவுள்ள சூழலில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

"உங்களைக் (காவல்துறையைக்) கண்டு மக்கள் ஓடி ஒளியக் கூடாது; மாறாக தங்களின் குறைகளைச் சொல்ல உங்களைச் சந்தித்துப்பேச வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உங்கள் செயல்பாடு அமைய வேண்டும்" என்று அறிவுறுத்திய நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.