இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது...
உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம்!
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பின்னர் வெளிநாட்டில் வசிப்பவர்கள், அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டால் இந்தியாவிலும் திருமண உறவு முடிந்துவிடும் எனக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கும் விவாகரத்து உத்தரவு, இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியம் என நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இந்து முறைப்படி முதல் திருமணம் செய்த ஒருவர், பின்னர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் திருமண முறிவு ஏற்பட்டுவிட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் விவாகரத்து பெற்றுள்ளார். மனைவி அந்த வழக்கை எதிர்த்திருந்த நிலையில், அந்த உத்தரவைப் பயன்படுத்தி அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது.
இந்தியாவின் இந்து திருமணச் சட்டத்தில், திருமண முறிவு ஏற்பட்டுவிட்டது என்ற காரணம் மட்டும் விவாகரத்துக்கான சட்டப்பூர்வ காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, வெளிநாட்டு நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவு இந்தியாவில் செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும், முதல் திருமணம் இந்தியச் சட்டப்படி தொடரும்போது இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படும் நபர் மீது இருதார மணம் தொடர்பான குற்றவியல் நடவடிக்கையைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அதேநேரத்தில், அந்த நபரின் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவிக்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்தது.