தாத்தா சொத்தில் பேரனுக்கு பிறப்புரிமை கிடையாது...  29 ஆண்டுகால வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

 

தாத்தாவின் சொத்து சட்டப்படி வாரிசுகளுக்குப் பிரிக்கப்பட்டு, அதில் தந்தைக்குக் கிடைத்த பங்கை பேரன் பிறப்புரிமை அடிப்படையில் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன்படி, உயில் எழுதாமல் ஒருவர் உயிரிழந்தால், அவரது சொத்து முதல் வகுப்பு வாரிசுகளுக்குச் செல்கிறது. அந்தப் பிரிவின் கீழ் தந்தைக்குக் கிடைக்கும் சொத்து, அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். பின்னர் பாகப்பிரிவினை மூலம் அவருக்குக் கிடைத்த பங்கும் தனிப்பட்ட சொத்தாகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவின் சொத்தில் தந்தைக்குக் கிடைத்த பங்கில் பாதியைத் தனக்குத் தர வேண்டும் எனக் கோரி, 1997-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். சுமார் 29 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் அடங்கிய அமர்வு, பேரனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

தந்தை உயிருடன் இருக்கும்போது, அவருக்குச் சட்டப்படி தனிப்பட்ட முறையில் கிடைத்த சொத்தில் மகன் பிறப்புரிமை கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.