ஜார்கண்ட் அரசு தேர்வு முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அரசுப் பணித் தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்துச் சி.பி.ஐ. விசாரணை கோரிய பொதுநல மனு மீது மத்திய அரசு, ஜார்கண்ட் மாநில அரசு மற்றும் மாநிலப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை பதிலளிக்க இந்திய உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் JSSC-CGL மற்றும் JPSC தேர்வின வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பீட்டு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து 24 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்திலும், 16 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தை அடுத்து, சர்ச்சைக்குரிய தேர்வுகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்ததுடன், தேர்வு அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால், தேர்வு ரத்து தொடர்பான சில அறிவிப்புகளுக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், அதிருப்தியடைந்த மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலக் குற்றப்பிரிவு விசாரணையை விட, நடுநிலையான விசாரணைக்காகச் சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ஹரிசரண் தேவ்கன் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இம்மனுவை விசாரித்து, மத்திய அரசு, ஜார்கண்ட் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சிசிடிவி காட்சிகள், ஓஎம்ஆர் தாள்கள் மற்றும் சர்வர் தரவுகள் சேதமடையாமல் பாதுகாக்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டத்தின் போது காவல் துறையினரைத் தாக்கியது மற்றும் அரசுப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 28 பேர் பெயரிலும், அடையாளம் தெரியாத 900 பேர் மீதும் 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ தலைமையில், "முறைகேடற்ற தேர்வு - வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி" என்ற கோரிக்கையை வலியுறுத்திப் ராம்பாக்கில் இருந்து ஜார்கண்டின் 24 மாவட்டங்களுக்கும் செல்லும் 'தேர்வு சீர்திருத்த யாத்திரை' தொடங்கப்பட்டுள்ளது.