ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பலி!

 

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதிய கோர விபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான நீரஜ் (40) என்பவர் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களின் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நீரஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேகமான சொகுசு காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.