தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

 

மத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தன்னிச்சையான முடிவுகள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் தலைமைத் தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவருடன் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாகப் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரு ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

கடந்த 10 மாதங்களில் 14 முறை ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாயின. மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க நோட்டீஸ் அளிக்கப்பட்ட போதிலும், அவைத் தலைவர்களால் அவை நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய அசல் படிவம் 6-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு  விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.