100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி... எரிபொருள் விநியோகம் எப்படி? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

 

 

இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குத் தேவையான எரிபொருளை எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து, E100 எனப்படும் கிட்டத்தட்ட தூய எத்தனால் வரை பயன்படுத்தக்கூடிய ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்களுக்கு அனுமதி அளித்தது. இந்த அனுமதி, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; சாதாரண பெட்ரோல் வாகனங்களில் E100 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான எத்தனால் ஒதுக்கீடு தொடர்பான வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, 100 சதவீத எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால், அவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை எப்படிச் சமாளிப்பீர்கள் என நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, பெரிய அளவில் உற்பத்தி ஏற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்றார்.மேலும், எத்தனால் கொள்கையில் விவசாயிகளின் நலன், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.