“அரசு மருத்துவர்கள் தனியாக தொழில் செய்யக்கூடாது” - உச்ச நீதிமன்றம் அதிரடி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் தடையை மீறித் தனியாகத் தனியார் கிளினிக் மற்றும் மருத்துவத் தொழில்களில் ஈடுபடுவதால், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் செயல்பாடுகள் மோசமடைவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக் கூடாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சில மருத்துவர்கள், தங்களின் அரசுப் பணியை முறையாகக் கவனிக்காமல் தனியாகத் தொழில் செய்து வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிகளுக்குப் புறம்பாகத் தனியார் தொழிலில் ஈடுபடும் அரசு மருத்துவர்கள் மீது "உயர்மட்ட விசாரணை" நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவு உ.பி மாநில அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட இந்த உயர்மட்ட விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இணைப் பேராசிரியரின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தனர்.
அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பொதுமக்களின் நலன் சார்ந்தது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் மனுவை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, விசாரணைக்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட அந்த மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.