20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம்? சூர்யா - ஜோதிகா நெகிழ்ச்சி... வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா, திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மீண்டும் திருமண உறுதிமொழியை புதுப்பித்துள்ளனர்.கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா இருவரும் திருமண உடையில் தோன்றினர். அவர்களது குழந்தைகள் தியா, தேவ், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
இது புதிய திருமணம் அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருமண உறுதிமொழியை மீண்டும் புதுப்பித்துக் கொண்ட நிகழ்வு. ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதை 20 ஆண்டுகால வாழ்க்கையை கொண்டாடும் vow renewal என குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுனிலும், சூர்யா வெள்ளை நிற கோட் மற்றும் கருப்பு பேன்ட்டிலும் தோன்றியுள்ளனர். ஜோதிகா தனது மகன் தேவுடன் திருமண மண்டபத்திற்குள் நடந்து வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வு ஒரு “முழுமையான திருமண வாழ்க்கையை” கொண்டாடுவதற்கானது அல்ல என்றும், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புரிதல்கள், விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பை கொண்டாடுவதாகவும் ஜோதிகா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சூர்யாவை தனது கணவர் மட்டுமின்றி நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவராகவும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். தங்களது அடுத்த 20 ஆண்டுகளையும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற உணர்வையும் அவர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யா - ஜோதிகா இருவரும் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பு 1999-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருமண உறுதிமொழி புதுப்பிப்பு நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.