"டிரம்புக்கு ஆச்சர்யம் காத்திருக்கு... அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எடுக்க முடியாது" -  ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

 

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தரைவழித் தாக்குதல் நடத்த முற்பட்டால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு "பெரிய ஆச்சரியம்" காத்திருப்பதாக ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக ஈரான் ராணுவம் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் வாயிலாக இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஈரான் மண்ணில் தரைவழித் தாக்குதல் நடத்துவது என்பது எங்களின் "சிவப்புக் கோடு" ஆகும். இதுவரை ஒவ்வொரு எதிரி தாக்குதலுக்கும் நாங்கள் ஒரு 'ஆச்சரியத்தை' கொடுத்திருக்கிறோம். தரைவழித் தாக்குதலில் அதை இன்னும் வீரியமாகக் காட்டுவோம்.

"பயங்கரவாதி டிரம்ப் இந்த விஷயத்தில் ஏதேனும் தவறு செய்தால், அவருக்குக் காத்திருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் தனது வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எமது மண்ணில் இருந்து அகற்ற முடியாது" என ஈரான் ராணுவம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அந்தப் பிராந்தியத்தில் (மத்திய கிழக்கு) உள்ள மற்ற அனைத்து நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளையும் செயலிழக்கச் செய்வோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் அஜிஸ் நசீர்ஜடே, புரட்சிகர காவல் படைத் தளபதி முகம்மது பாக்பூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். "நாங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, எதிரியை முற்றிலுமாக அழிப்பதே நோக்கம்" என அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.